ஓரு தமிழ் கணினி நண்பனின் வலைப்பதிவு

தமிழை வளர்க்கத் தமிழால் இணையத்தில் தளம் அமைப்போம்

Tuesday, November 16, 2004

லினக்ஸ் - ஒரு அறிமுகம்

லினக்ஸ்
லினக்ஸ் - இந்த வார்த்தையினை கேள்விப்பட்டிராதவர் யாருமே இருக்கமுடியாது.

"ஆனால் லினக்ஸ் என்றால் உண்மையில் என்ன? அது எனக்கு உபயோகமாக இருக்குமா? என் நண்பரிடம் கேட்ட போது அவர் லினக்ஸ் என்பது பாதுகாப்பான ஓர் இயக்குதளம். ஆனால் அதன் பயன்பாடு சேவை வழங்கிகளில் (Servers) மட்டும் தான் என்று சொல்கிறாரே? அதே நேரத்தில் இன்னொரு நண்பர் லினக்ஸினை தனது தனியாள் கணினியிலும் (Personal Computer) உபயோகிப்பதாக சொல்கிறார். உண்மையில் இதன் பயன்பாடுகள் என்னென்ன?'"

"ஏன்யா.. எப்பம் பார்த்தாலும் லினக்ஸ் லின்க்ஸுன்னு புலம்பிக்கிட்டே இருக்கே. உண்மையிலேயே லினக்ஸ் விண்டோஸை விட சிறந்ததுன்னு எதை வச்சு சொல்ற. இங்கே பாரு.. விண்டோஸ் எவ்வளவு ஈஸியா இருக்கு. லினக்ஸிலே 'My Computer' ஐகானையே கானோம். அப்புறம் 'C ட்ரைவுக்கு' எப்படி போறதுன்னே தெரியலை. எல்லாத்தையும் குழப்பி குழப்பி வைச்சிருக்கிற இந்த ஆப்பரேட்டிங்க் சிஸ்டத்தை எவன் உபயோகிப்பான்."

இது கணினியை பல காலமாக உபயோகித்து வரும் சில நண்பர்கள் எழுப்பும் சந்தேகங்கள்
இதைத் தவிர உங்கள் மனதில் இன்னும் பல கேள்விகள் இருக்கும். கொஞ்சம் பொறுங்கள். இங்கே நாமெல்லாம் சேர்ந்து இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தேட முயற்சி செய்யலாம்.
சின்னப் புள்ளங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் பிடிச்ச ஒரு விசயம் கதை கேட்பது. அதனால் ஒரு சின்ன கதையுடன் நமது பயணத்தைத் தொடங்குவோம். "Long long ago... so long ago.. no body knows how long ago.." என்று ஆரம்பிக்கும் ராஜா ராணி கதையல்ல இது. இது மிகச் சமீபத்தில் நடந்த, நாம் எல்லோரும் அறிந்த ஒரு கதை.
ஆம். லினக்ஸ் தோன்றிய கதை.


லின்க்ஸின் தொடக்கங்கள்

1991இல் 'லினஸ் பெனெடிக்ட் டொர்வால்ட்ஸ்' (Linus Benedict Torvalds) என்ற ஃபின்லாந்து இளைஞர் தனது 21ஆவது வயதில் தொடங்கிய புரட்சி தான் இந்த லினக்ஸ் இயக்குதளம். அப்போது அவர் தொழில் முறையில் மென்பொருள் பொறியாளர் அல்ல. தனது பட்டப்படிப்பிற்காக ஹெல்சின்கியில் (Helsinki) படித்துக் கொண்டிருந்த மாணவர். அவர் இதனை தொடங்க காரணம்?
அப்போது மினிக்ஸ் (Minix) என்ற இலவச இயக்குதளம் கல்வித்துறையில் அதிகமான அளவில் உபயோகத்தில் இருந்தது. மினிக்ஸ் என்பது யுனிக்ஸ் குடும்பத்தை சார்ந்த ஒரு இயக்குதளம். மினிக்ஸின் கரு (Kernel) 80286 மைக்ரோப்ராசஸருக்காக (Micro processor - நுண் செயலகம்) வடிவமைக்கப்பட்டிருந்தது.
நமது கதை நாயகன் 'லினஸ்' அப்போது தான் 80386 பொருத்திய கணினி ஒன்றினை வாங்கியிருந்தார். அவருக்கு மினிக்ஸ் கெர்னலை முன்னேற்றங்கள் செய்து தனது புதிய 80386 ப்ராசஸரின் முழு சக்தியினை உபயோகப்படுத்தியாக வேண்டும் என்று முடிவு செய்தார்.
மினிக்ஸ் கெர்னலில் மாற்றங்கள் செய்வதற்கு பதிலாக நாமே புதிதாக ஒரு கெர்னலை எழுதத் தொடங்கினால் என்ன என்ற எண்ணத்தில் பிறந்தது தான் இந்த லினக்ஸ் கெர்னல். இந்த இடத்தில் ஒன்றை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள் லினக்ஸ் என்பது 'லினஸ் ட்ரொவால்ட்ஸ்' துவங்கி வைத்த இந்த கெர்னலைத் தான் குறிக்கும். இதனை தொடர்ந்து தனது முயற்சியில் உருவான இந்த கெர்னலை அதன் ஆணை மூலத்துடன் GNU (க்னு) என்னும் உரிமத்தில் கீழ் யாவரும் உபயோகப்படுத்தும் வகையில் வெளியிட்டார்.
1992 வாக்கில் லினக்ஸ் கெர்னலை முன்னேற்றுவதில் கிட்டத்தட்ட 100 மென்பொருள் வல்லுனர்கள் ஈடுபட்டிருந்தனர். அடுத்த வருடத்தில் ஆயிரம் பேர் என்று பெருகிய இந்த பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை இன்று பல்லாயிரத்தை தொட்டு நிற்கிறது. அதன் விளைவு கணினித்துறையில் வேறு எந்த மென்பொருளும் கண்டிராத அபிரிதமான வளர்ச்சியினை இன்று லினக்ஸ் அடைந்திருப்பது தான்.
இன்று
சமீபத்திய மதிப்பீடுகள் இன்று உலகத்தில் 18 மில்லியன் லினக்ஸ் பயனாளர்கள் இருப்பதாக தெரிவிக்கின்றன.
லினக்ஸ் பயனர்களின் எண்ணிக்கை - நன்றி:
Linux Counter
லினக்ஸ் இயக்குதளம் பற்றி 'லினஸ் ட்ரொவால்ட்ஸ்' என்னென்ன கணவுகள் கொண்டிருந்தாரோ தெரியாது. ஆனால் இன்று அவர் எதிர்பார்த்ததை விட பல சாதனைகளை லினக்ஸ் செய்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். லின்க்ஸ் என்பது கணினியை பற்றி மேலும் கற்றுக்கொள்ல உதவும் ஒரு விளையாட்டு பொம்மை (Hacker's toy) என்ற எண்ணம் தான் தொடக்கத்தில் இருந்தது.
ஆனால் இன்று
லின்க்ஸ் இயக்குதளத்தில் உபயோகிப்பதற்கு பல்லாயிரக்கணக்கான திறந்த நிரல் செயலிகள் கிடைக்கின்றன
முப்பரிமாண விளையாட்டுகளில் (3D games) தொடங்கு அலுவலகங்களுக்கு தேவையான ஓபன் ஆஃபிஸ் வரை எல்லா துறைகளிலும் லினக்ஸ் உபயோகப்படுத்தப் படுகிறது.
லினக்ஸ் உபயோகிப்பவர்களுக்கு உதவும் பொருட்டு எண்ணிலடங்கா இணைய தளங்களும், குழுமங்களும் இருக்கின்றன.
கூகிள் தேடுபொறியில் இன்று தேடியதில் கிடைத்த முடிவுகள்.
ஆங்கிலத்தில் 'Linux' என்று தேடிய போது கிடைத்த முடிவுகள்
linux - 101,000,000 பொருத்தங்கள
windows - 123,000,000 பொருத்தங்கள்
தமிழில் 'லினக்ஸ்' தேடிய போது கிடைத்த முடிவுகள்.
லினக்ஸ் - 587 பொருத்தங்கள்
விண்டோஸ் - 139 பொருத்தங்கள்
ம்ம்ம்.. நம்ம ஆட்கள் லினக்ஸ் விசயத்திலே கொஞ்சம் உஷாரா தான் நிறையவே தெரிஞ்சு வச்சிருக்காங்க போலிருக்கு.
'லினஸ் டொர்வால்ட்ஸ்' பற்றிய மேலும் சில தகல்வகள்

லினஸ் ஃபின்லாந்திலிருந்து அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாகிற்கு குடி பெயர்ந்து 'ட்ரான்ஸ்மெடா' என்னும் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினாலும், லினக்ஸ் கெர்னல் வடிவமைக்கும் குழுவினரை இன்னமும் வழி நடத்தி செல்கிறார்.
http://www.cs.helsinki.fi/u/torvalds/ என்ற தனது இணைய பக்கத்தில் அவர் சொல்வது
"The homepage of a WWW-illiterate ... .. If you're looking for Linux information, you'll find more of it somewhere else, because I'm hopeless when it comes to documentation".
விண்டோஸ் குறித்து லினஸ் ஒரு முறை நகைச்சுவையாக கூறியது:
When you say "I wrote a program that crashed Windows", people just stare at you blankly and say "Hey, I got those with the system, 'for free'".
லினஸ்ஸின் வாழ்கை வரலாறு 'Just for Fun' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
லினஸ் ட்ரொவால்ட்ஸ் தனது புதிய கெர்னலை comp.os.minix என்ற யூஸ்நெட் க்ரூப்பில் அறிவித்த
முதல் செய்தி.
அதனை தொடர்ந்து லினக்ஸ் பற்றி நடந்த
சில விவாதங்களும் அதற்கு லினஸ் அளித்த பதிலும்.
நன்றிகள்: திரு.நவன் பகவதி

லினக்ஸ் இயக்குதளத்தின் பகுதிகள்

இயக்குதளத்தின் முக்கிய பகுதிகளைப் பற்றி பார்ப்போம். எந்த ஒரு இயக்குதளத்திலும் குறைந்தது மூன்று பகுதிகளாவது இருக்கும்.
1. கெர்னல்
2. ஷெல்
3. பயன்பாட்டு மென்பொருட்கள்

1. கெர்னல் (Kernel)


கெர்னல் என்பது தான் இயக்குதளத்தின் கரு. கெர்னலின் பயன்பாடுகளின் சில:
வன்பொருள் மேலாண்மை
இயக்கத்தில் இருக்கும் செயல்களை மேலாண்மை செய்வது (Process manamenet)
செயல்களுக்கு தகுந்தாற்போல் மையச்செயலகத்தின்
நேரத்தையும் (CPU Time), நினைவகத்தையும் (Memory) பங்கிட்டு கொடுப்பது.
கோப்புகளை சேமிப்பதற்கு தேவையான வழிவகைகளை செய்வது (Storage) போன்றவை.

பயனர்கள் கெர்னலுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தேவையேதும் இல்லை. தேவை இல்லை என்பதை விட தொடர்பு கொள்ள முடியாது என்பது தான் உண்மை.
'லினஸ் டொர்வால்ட்ஸ்' எழுதியாக நான் முதலில் பார்த்தோம் அல்லவா. அவர் எழுதி வெளியிட்டது லினக்ஸின் கெர்னலை தான்.

pencil
.
பயனருக்கும் இயக்குதளத்திற்கும் இடையேயான தொடர்பு


2. ஷெல் (Shell)

ஷெல் என்பது இயக்குதளத்திற்கும் பயனற்களுக்கும் இடையேயான ஒரு தொடர்பு என்று கொள்ளலாம். நாம் இயக்குதளத்திற்கு ஏதேனும் கட்டளையிட வேண்டும் என்றால் அதனை 'ஷெல்' மூலமாக அனுப்ப முடியும். அதே போல் இயக்குதளமும் கட்டளைகள் நிறைவேற்றியவுடன் 'shell' மூலமாகத் தான் முடிவுகளை பயனர்களுக்கு அறிவிக்கும்.
Bash, CSH, KSH, SH போன்றவை பரவலாக உபயோகத்தில் இருக்கும் ஷெல்

3. பயன்பாட்டு மென்பொருட்கள் (Applications)

நாம் உபயோகப்படுத்தும் பயன்பாட்டு மென்பொருட்களும் கணினியை கட்டுப்படுத்த நமக்கு உதவுகிறது. உதராணமாக ஒரு கோப்பினை அச்செடுக்க வேண்டுமென்றால் நாம் 'Shell' இல் இருந்து நேரடியாக அச்செடுக்க வேண்டிய கட்டளையை கொடுக்கலாம், அல்லது அந்த கோப்பை பார்வையிட/மாற்ற/உருவாக்க உதவும் ஏதாவதொரு 'பயன்பாட்டு மென்பொருள்' மூலமாக கட்டளையிடலாம்.
Word processor (உரைதொகுப்பு செயலி), spread sheet (விரிதாள்), Web Browsers (இனைய உலாவி) போன்ற மென்பொருட்களை பயன்பாட்டு மென்பொருட்களுக்கு உதாரணமாக கொள்ளலாம்.
லினக்ஸ் இயக்குதளத்தில் உபயோகத்தில் இருக்கும் பயன்பாட்டு மென்பொருட்களும் திரந்த நிரல் மென்பொருட்களே (Open Source Softare). இவை பொரும்பாலும் 'க்குனு' (GNU) உரிமத்தில் கீழ் விநியோகிக்கப்படுகின்றன.

நன்றிகள்: திரு.நவன் பகவதி

இயக்குதளத்தின் செயல்பாடுகள்

கணினியை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவதொரு இயக்குதளத்தை உபயோகித்து வருகிறோம். பெரும்பாலான கணினிகளில் விற்பனை செய்பவர்களே விண்டோஸ் இயக்குதளத்தை நிறுவி விடுவதால் நீங்கள் அனைவருமே ஏதாவது ஒரு விண்டோஸ் இயக்குதளத்தை உபயோகித்திருக்கக் கூடும். இது தவிர 'மேக்கிண்டோஷ்' (Macintosh) கணினிகளில் 'ஓஸ் எக்ஸ்' (OS X) என்ற இயக்குதளம் வருவதை காணலாம்.
இயக்குதளம் என்பது கணினியை இயக்குவதற்கு தேவையான அடிப்படையான் ஒமென்பொருள் என்று கொள்ளலாம். கணினிகளில் இருக்கும் வன்பொருளை சில வரைவுகளுக்குள் இயங்கச் செய்வது இதன் முக்கிய வேலை. அது தவிர கணினிகளில் இயங்கும் மென்பொருட்களை மேலாண்மை செய்வதும் இதன் பொருப்பு தான்.

இயக்குதளம் என்ற இந்த மென்பொருள் தான் கணினியை நீங்கள் துவக்கியதும் தொடங்கும் முதல் மென்பொருள். இயக்குதளம் இயக்கத்தில் இருந்தால் தான் மற்ற பயன்பாட்டு மென்பொருட்கள் (Applications) இயங்க முடியும்.விளக்கப்படம்


இயக்குதளத்தின் செயல்பாடுகள்


இயக்குதளங்களின் முக்கிய செயல்பாடுகள்

1. வன்பொருள் மேலாண்மை (Hardware Management)

கணினியில் இருக்கும் வன்பொருட்களை மேலாண்மை செய்வது இயக்குதளத்தின் முக்கிய பணிகளில் ஒன்று. இந்த வன்பொருள் என்பது கணினிக்கு கணினி மாறு படலாம். பல்வேறு வகையான வன்பொருட்கள் இருந்தாலும் பயனர்கள் அவற்றை இயக்கும் விதம் மாறுபடாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இயக்குதளம் தான்.
உங்களுக்கு விண்டோஸ் இயக்குதளம் பழக்கமானது என்றால் விண்டோஸ் கொண்டு இயங்கும் எந்த ஒரு கணினியையும் நீங்கள் உபயோகிப்பது சுலபமாக தான் இருக்கும். அந்த கணினியின் உள்ளிருக்கும் ஹார்ட்வேரைப் பற்றி நீங்கள் தெரிய வேண்டிய அவசியமே இல்லை. அதற்கு காரணம் இயக்குதளம் ஒன்றாக இருப்பது தான்.
அதே போல தான் லினக்ஸ், யுனிக்ஸ் என்ற மற்ற இயக்குதளங்களும்.2. மையச் செயலக மேலாண்மை (CPU Management)

'CPU' இன்றி கணினி உலகத்தில் ஒரு அனுவும் அசையாது. ஒவ்வொரு கணினியிலும் CPU என்ற மையச் செயலகம் இருக்கும். CPU என்பதை மனிதர்களின் மூளையுடன் ஒப்பிடலாம். கணினியில் நடக்கும் ஒவ்வொரு இயக்கத்திலும் CPUவின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது.
மென்பொருட்களும், வன்பொருட்களும் அனைத்து நேரங்களிலும் CPUவை தொந்தரவு செய்து கொண்டே தான் இருக்கும். CPUவிற்கு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும். எந்த வேலை முக்கியமானது போன்ற விடயங்களை கற்றுத்தருவதும் இயக்குத்தளங்களின் வேலை தான்.
3. நினைவக மேலாண்மை (Memory Management)
கணினிகளின் அடுத்த முக்கியமான அம்சம் அதன் நினைவகம். இந்த நினைவகத்தை சிறப்பான முறையில் பயன்படுத்துவதும் இயக்குதளத்தின் வேலை தான்.
இயக்குதளம் இல்லையென்றால் ஒரு செயல் (Process) குறித்து வைக்கும் தரவினை (data) இன்னொரு செயல் அளித்து விட வாய்ப்பு இருக்கிறது. அப்புறம் என் 'டேட்டாவை' (data) காணவில்லை என்று ஒன்றுக்கொன்று சண்டை போட வேண்டியது தான். அது போன்ற குழப்பங்கள் நிகழாமல் இயக்குதளம் ஒவ்வொரு கணினி செயலுக்கும் (Computer Process) தனித்தனியாக நினைவகத்தின் ஒரு பகுதியினை ஒதுக்கி விடும்.4. சாதன இயக்கு நிரல் (Device Drivers)

'Device drivers', கணினியை உபயோகிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே அனைவரும் கற்றுக்கொள்வது இந்த மந்திரச் சொல்லை தான். 'மவுஸ் வேலை செய்யவில்லையா, ட்ரைவரை செக் பன்னு. டிஸ்ப்ளே சரியா இல்லையா ட்ரைவரை செக் பன்னு' என்று சொலகிறோம்/சொல்வதைக் கேட்கிறோம்.
'Device Driver' என்பது வன்பொருளை இயக்குவதற்கு தேவையான ஒரு மென்பொருள். 'Device driver'கள் தான் மற்ற வன்பொருட்களும், புறக் கருவிகளும் (Peripherals) கணினியின் மையக் கட்டுப்பாட்டுடன் இனைந்து வேலை வழிவகுக்குகின்றன. அதனால் தான் நீங்கள் எந்த பிரண்டர் (Printer - அச்சுப்பொறி) உபயோகித்தாலும் அவற்றை பயன்பாட்டு மென்பொருட்களிலிருந்து ஒரே மாதிரியாக அச்செடுக்க (Print) முடிகிறது. இந்த 'Device drivers'இனை வழங்குவதும் இயக்குதளத்தின் மற்றொரு முக்கியச் செயல்பாடு.
இயக்குதளத்தின் கூடவே பெரும்பாலான வன்பொருட்களுக்கு தேவையான drivers வந்து விடும். அதையும் மீறி சில சமயங்களில் சில புதிய வன்பொருட்கள் வெளிவரும் போது அவற்றிற்கான ட்ரைவர்கள் தனியாக வன்பொருள் தயாரிப்பாளர்களே வெளிவிடுவார்கள்.5. உ/வெ மேலாண்மை (I/O Management)

Input/Output (உள்ளிடு/வெளியிடு) என்ற செயல்பாடுகள் இல்லாமல் கணினியால் எந்த ஒரு பயன்பாடும் கிடையாது. இந்த உ/வே செயல்பாடுகளை மேலாண்மை செய்வதும் இயக்குதளம் தான்.


6. பயன்பாட்டு மென்பொருட்கள் (Applications)

இது தவிர இன்று புழக்கத்தில் இருக்கும் எல்லா மென்பொருட்களுமே பல பயன்பாட்டு மென்பொருட்களையும் உள்ளடக்கியே வருகின்றன. உ.ம்: Text edit, Calculater, calendar போன்றவை.
மேலே நாம் பார்த்தது எல்லாம், இயக்குதளங்கள் அளிக்கும் செயல்பாடுகளில் ஒரு சிறிய பகுதியினை தான்.


நன்றிகள்: திரு.நவன் பகவதி

Saturday, October 09, 2004

தேடலின் சிகரம் கூகிள்! (Google)


இன்று இணையத்தில் தேடல் இயந்திரம் (Search Engine) என்றால், அனைவரதும் நினைவுக்குவருவது கூகிள்.com தான் (www.google.com) அந்தளவிற்கு துல்லியமான தேடலினால் பல்லாயிரக்கணக்கானவர்கள்விரும்பி உபயோகிக்கும் புகழ்பெற்ற இணையத்தளமாக இது திகழ்கிறது.

1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தளமானது, அதற்கு முன் தேடலில் முண்ணனி வகித்த பல இணையத்தளங்களைப் பின் தள்ளிவிட்டு இரண்டுவருடங்களிலேயே, அதாவது 2000 ஆம் ஆண்டில் 5.7மில்லியன் பயனாளர்களையும், 2002 இன் தொடக்கத்தில் 18 மில்லியன் பயனாளர்களையும் இன்று பல மில்லியன் பயனாளர்களைக் கொண்ட பாரிய தளமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இன்று உலகில் கூகிள் தளத்தைப் பயன்படுத்தாத நாட்டவர்களே இல்லை. அதனால்தான் எனவேதான்இணையத்தில் அதிகம் விரும்பி உபயோகிப்படும் தளங்களிலே மூன்றாவதாக வரமுடிந்துள்ளது. முதலிடத்தில்உள்ள யாஹூவும் (Yahoo), நெட்ஸ்கேப் (Netscape) போன்ற பெரிய நிறுவனங்களும், பல நூற்றுக்கணக்கான இணையத்தளங்களும் தமது தேடலுக்கு கூகிளின் உதவியைத்தான் நாடுகின்றன என்பதிலிருந்தே இதனதுபலமும் பெருமையும் துல்லியமான தேடலின் புகழும் விளங்கக்கூடியதாகவுள்ளது.

இந்தப் புகழ்ச்சிக்கெல்லாம் காரணமானவர்கள் செர்ஜி பிரின் (Sergey Brin),லரி பேஜ் (Larry Page)ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரும் 22 வயதுள்ளபோது 1995 ஆம் ஆண்டு உலகப்புகழ்பெற்ற அமெரிக்கப்பல்கலைக்கழகமான ஸ்டாண்ட்போர்ட் (Standford)பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் Doctor பட்டம்பெறுவதற்காக சேர்ந்தனர்.

அங்கு நண்பர்களான இருவரும் தமது பட்டப்படிப்புக்காகப் பல தகவல்களை பல்கலைக்கழகக் கணினிகளில்உள்ள பல தகவல் களஞ்சியங்களில் தேடவேண்டியிருந்தது. அத்துடன் இவர்களின் கணினி பற்றிய அறிவாற்றலை அறிந்த நண்பர்களும், பிற கல்லூரி மாணவர்களும், கணினியிலே தமக்கான தகவல்களைத்தேடித்தருமாறு அடிக்கடி கேட்டுவந்தனர்.

இதற்குத் தீர்வு காண்பதற்காக இவர்கள் இருவரும் தமது பல்கலைக்கழகக் கணினிவலையமைப்பினுள்பரீட்சார்த்தமாக ஒரு தேடல் இயந்திரக்கட்டமைப்பினை (Search Engine)அமைத்தனர்.அதன் மூலம் தமக்குத்தேவையான தகவல்களை இலகுவாகத் தேடிப்பெற முடிந்ததால்,அதற்கு மாணவர்கள் மத்தியில் அமோகமானவரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்தது.அதனால் இந்தத் தொழிநுட்பத்தை இணையத்திலும் தேடக்கூடியபலமான தளமாக மாற்றி, இவர்கள் அமைத்ததுதான் இன்று உலகில் அனைவராலும் தலை தூக்கிப்பாராட்டப்படும்கூகிள் (Google) தேடல் இயந்திரமாகும்.


Friday, October 08, 2004

சொந்த வீடு யுனிகோட் தரும் மகிழ்ச்சி

கணினி கண்டுபிடிக்கப் பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கண்டுபிடித்தவர் யார், எதற்காகக் கண்டுபிடித்தார்கள் என்ற கேள்விகளுக்கு பலவாறான கருத்துகளும் உலவுகின்றன.

இன்றைய பயன்பாட்டைப் பொருத்த வரை, கணினிவழி செயல்படுத்தப்படும் செயல்கள் பலவற்றைத் தொகுத்து, அந்தத் தொகுப்பின் சாரத்தைச் சற்று கூர்ந்து பார்த்தால் அடிப்படை நோக்கங்கள் தெளிவாகும். மனிதர்கள் செய்யத் தயங்கும் பல செயல்களைக் கணினியிடம் விட்டுவிட முயல்கிறோம். செய்த கணக்கையே மீண்டும் மீண்டும் செய்வது, ஒரே கடிதத்தை ஆயிரக் கணக்கானோருக்கு அவரவர் சொந்தப் பெயரிட்டு எழுதுவது, அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்கனவே கொடுத்த பதிலை மீண்டும் மீண்டும் கொடுப்பது இந்தச் செயல்கள் எல்லாம் நமக்கு உற்சாகத்தைத் தருவதுமில்லை, நமது உற்பத்தியைக் கூட்டுவதுமில்லை!

"தம்பி, போன வருஷம் நாம அவனுக்கு அனுப்பிய நோட்டீஸை ஏதே ஒரு கோப்புல வெச்சிருக்கேன் - கொஞ்சம் தேடிக் கொடுப்பா" - இது போன்ற விண்ணப்பங்களை, நாம் மகிழ்ச்சியோடு ஏற்பதில்லை! அந்த நோட்டீஸ் தொடர்பான இரண்டு சொற்களை உச்சரித்தால், அந்த ஆவணம் கண்முன்னே வந்து விழவேண்டும். இதுதான் இன்று நாம் விரும்புவது. இந்த "மந்திரம்" தப்பாமல் வேலைசெய்தால், தேடுதலும் ஓர் உற்சாகம் ஊட்டும் செயலாக அமையும்!

இணையத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்கள் சிலவற்றில் "தேடும் வசதி" தலையாயதாக அமைகிறது. யாஹூ, எம்.எஸ்.என், கூகல் போன்ற அமைப்புகள், நாம் விரும்பும் விவரத்தைத் தேடுவதற்குப் பெரிதும் உதவுகின்றன. நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் விவரத்திற்குத் தொடர்புடைய ஒரு சில சொற்களே!.

ஆனால் இந்த அமைப்புக்களில் தேடுவதற்கு இது நாள் வரை நாம் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. தமிழில் அமைந்துள்ள இணையப் பக்கங்கள், ஆவணங்களைக்கூட ஆங்கிலத்தைப் பயன்படுத்தித்தான் தேடிவருகிறோம்.

இதில் எல்லாம் தமிழும் இடம்பெறெ வேண்டும் என்று நம் எல்லோருக்குமே ஆசை இருக்கிறது. இப்போது அந்த ஆசை நிறைவேறத் துவங்கியிருக்கிறது.!ஆம். கூகுல் போன்ற அமைப்புக்களில் இனித் தமிழ்ச் சொற்களை தமிழிலேயே எழுதித் தேடலாம்.

இதுநாள் வரை இயலாதிருந்த இது இப்போது எப்படி சாத்தியமாயிற்று? விடை: யூனிகோட்..

யூனிகோட் குறியீட்டு முறை தமிழுக்குத் தரும் சிறப்புகளைக் குறித்து திசைகளின் முதலாவது இதழில் எழுதியுருந்தேன் (http://groups.msn.com/namathuthisaigal/kaatruveliyidaimuthu.msnw). அதில், "இப்போது நாம் பயன்படுத்தும் தமிழ், "வாடகை வீட்டுத்" தமிழ். நமக்கென்று ஒரு வீடு இல்லை - வீடு கட்ட வசதி இருந்தும் இடம் இல்லை. எனவேதான் வாடகை வீட்டில் இருந்து வருகிறோம். வீட்டில் நாம் குடியிருந்தாலும் வீட்டுக்குச் சொந்தக்காரர் நாம் அல்ல - ஓர் ஐரோப்பியர்! நகராண்மைக் கழகத்தைப் (அதாவது கணினியைப்) பொறுத்தவரை, இந்த வீட்டில் இருந்து வருபவர் ஓர் ஐரோப்பியர். அவருக்கு ஏற்றவாறே சூழ்நிலைகளையும் அமைத்துத் தருவார்.

வாடகை வீட்டில் இருந்து என்னதான் தமிழில் நாம் செய்தி அனுப்பினாலும், கணினியும் இணையமும் அதனை ஓர் ஐரோப்பிய மொழியில் அமைந்த செய்தியாகத்தான் கருதும்......யூனிகோடில் இந்தப் பிரசினை இல்லை. நிறைய இடம் உள்ளது. அதுவும் தமிழுக்கென்றே தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில் எந்த "ஸ்டைலில்" வீடு கட்டினாலும், அது ஒரு தமிழரின் வீடு என்பதை கணினியும் இணையமும் உணர்ந்து கொள்ளும். அதற்கேற்றாற் போல் சூழ்நிலைகளையும் அமைத்துக் கொடுக்கும்.... யூனிகோட் அமைப்பில் தமிழ் வரிகளுக்குப் "பாதுகாப்பு" வழங்கப்படும். அனுப்பப்படும் செய்தி பெறப்படும் போது, தமிழிலேயே தோன்றும்!" என்று குறிப்பிட்டிருந்தேன்.

எனவே திசைகள் வெளிவந்ததும் நான் செய்த முதல் வேலை, கூகுல், எம்.எஸ்.என். அமைப்புக்களில் தமிழில் அனுப்பபடும் செய்தி தமிழ்லேயே தோன்றுகிறதா என்று சோதித்துப் பார்த்ததுதான். அந்தத் தேடலின் விடைகளை இதோ நீங்களும் பாருங்கள்:இதில் தேடுதலுக்கான சொல் தமிழில் அமைந்திருப்பதையும், அவற்றிற்கான விடைகளும் தமிழிலேயே அமைந்திருப்பதையும் பார்க்கலாம்.

கூகுலில் மட்டுமன்றி எம்.எஸ்.என்.னிலும் இது போன்ற தேடலை மேற்கொண்டேன்:எனவே, யூனிகோட் அமைப்பில் அமைந்த தமிழ் ஆவணங்களைத் தேட, கூகல், எம்.எஸ்.என் அமைப்புகளில் தமிழைப் பயன்படுத்தலாம். இந்த அமைப்புகள் இவை தமிழ்ச் சொற்கள் என்பதை உணர்ந்து தமிழ்லேயே விடை தரும்., தேடும் ஆவணத்தில் உள்ள ஓரிரு சொற்களை மட்டும் கொடுத்தால் போதும் இணையத்தையே கூவி எழுப்பிவிடும் "கூகல்" - அதுவும் தமிழில் கூவுகிறது என்றால் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா?

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

பலர் பல வழிகளைப் பயன்படுத்துவார்கள் இணையப் பண்பாடும் அதுதானே!. நான் பயன்படுத்துவதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யூனிகோட் அமைப்பில் உள்ள பக்கங்களை எல்லா விண்டோஸ் அமைப்புகளிலும் "படிக்கலாம்". ஆனால், தமிழில் "அடிப்பதற்கு" (உள்ளீடு செய்வதற்கு), விண்டோஸ்2000 அல்லது விண்டோஸ் XP தேவைப்படும். (புதிய மெக் கணினிகளிலும் கூட இயலும், இதைப் பிறகு காண்போம்).

தமிழில் உள்ளீடு செய்ய நான் பயன்படுத்துவது முரசு அஞ்சல். இது இயங்கிக்கொண்டிருக்கும் போது, இதன் சின்னம்,சிறியதாக திரையின் கீழ் (வலது பக்கம்) இருக்கும். அதன் மேல் உங்கள் சுட்டியின் (mouse) வலது பட்டனைத் தட்டினால், ஒரு பட்டியல் தோன்றும். அதில் "Encoding" என்ற சொல்லைத் தேர்தெடுத்து, உடன் தோன்றும் இணைப்புப் பட்டியலில் "Unicode" சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான். இனி, உங்கள் கூகல் பக்கத்திற்குச் சென்று (http://www.google.com) வழக்கம் போல் F12 அழுத்தி, தமிழில் தேட வேண்டியதுதான்.

தேடப்பட்டப் பக்கங்கள்

கொடுத்தச் சொல்லை எடுத்துச் சென்று, கிடைத்த பக்கங்களைப் பட்டியலிட்டுக் கொடுக்கும் கூகல். ஆங்கிலத்தில் செய்வதைப் போலவே, பட்டியலைத் தட்டினால், பக்கங்கள் வரும். இந்தப் பக்கங்களும் யூனிகோடில் இருப்பதால் - உங்கள் உலாவியில் (browser) மாற்றங்கள் தேவையில்லை - தானாகவே தமிழில் தோன்றும்.

திசைகளில் வெளிவந்த அனைத்து கதைககளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் கூகல் வழி தமிழிலேயே கூவி அழைக்கலாம். எழுதியவரின் பெயரோ, கதை-கட்டுரையின் தலைப்போ அல்லது அதில் பேசப்படும் பொருளோ போதும் - தேடி எடுத்துவிடலாம். இந்த "மந்திரம்" வேலை செய்கிறது!

இன்றைய சூழ்நிலையில், மிகக் குறைவான பக்கங்களே நமக்குக் கிடைக்கின்றன. திசைகள் இணைய தளத்தைத் தவிர ஓரிரு சோதனைப் பக்கங்கள் மட்டுமே யூனிகோட் குறியீட்டு முறையில் அமைந்திருக்கின்றன. நாளடைவில் மற்ற பக்கங்கள் யாவும் யூனிகோட் முறைக்கு மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூவி அழைக்கும் போது, ஒன்றல்ல இரண்டல்ல, ஓர் ஆயிரம் பக்கங்கள் கிடைக்க வேண்டும்! அப்போதுதான் நமது சொந்த வீட்டின் மகிமை நமக்கு விளங்கும்!

நன்றி: திசைகள்

RSS செய்திஓடை - உமர் அவர்களின்கட்டுரைசில காலமாக இந்த RSS ஓடை அல்லது RSS ஊட்டு என்பதை இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக இணைய தளங்களில் செய்தி வாசிப்போர் இதை அறிய வந்திருக்கக்கூடும். ஒரு செஞ்சதுரத்தில் XML என்றோ அல்லது RSS என்றோ குறிக்கப்பட்டிருக்கும்.இந்த செஞ்சதுரம் காணப்படும் இணையதளங்களில் இம்மாதிரி வசதி கிட்டும். அவையன்றி வலைப் பூக்களிலும் இம்மாதிரி வசதி உண்டு.
நண்பர் பத்ரியின் வலைப்பூ பதிவை அவ்வப்போது படிக்க எண்ணுகிறீர்களா? நீங்கள் உலகில்நடக்கும் விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவரா? உங்களுக்கு பிடித்தமானவற்றை சுடச்சுட அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் இந்த RSS வசதியைப் பற்றி சிந்திக்க வேண்டும். மேலும் நீங்கள் யாஹூ மின் மடற்குழுக்களைப் படிப்பவாரா?அப்படியானால் நிச்சயம் இந்த வசதியை நீங்கள் பெற்றே ஆகவேண்டும். ஆமாம் இப்போது யாஹூ மின் மடற்குழுவிலும் இம்மாதிரி வசதியைத் தந்திருக்கிறார்கள்.
இது xml கோப்பு அடிப்படையில் அமைந்த ஒரு பொருளடக்கப் பட்டியல். ஆக்கத்தின் அடிப்படை விடயங்களான தலைப்பு, எழுதியவர், நேரம் மற்றும் எதைப் பற்றியது என்ற சிறு குறிப்பு அடங்கியவைதாம் இந்த பட்டியல். அவ்வப்போது கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள ஏற்பட்ட முறையே இது. இபோது அனேகமாக எல்ல வலைப்பூக்களிலும் பல இணைய தளங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.xml இன் ஒரு வகையான RDF கட்டமைக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கபடுவதால் RDF Site Summary என்றும், எளிதாக செய்திகளை பரிமாறிக் கொள்வதால் Really Simple Syndicationஎன்றும் மொத்ததில் RSS என்றும் அழைப்படுகிறது.
RSS வசதியை நாம் பாவிப்பதால் உடனுக்குடன் செய்திகளைப் பெறுவது மட்டுமல்ல. ஒரே இடத்திலிருந்து நீங்கள் விரும்பும் தளங்களை அணுக முடியும். இந்த RSS ஊட்டுக்களைப் படித்து அவற்றில் பொதிந்திருக்கும் செய்திகளைத் தரவும் இணைய தளங்களை அங்கிருந்து அணுகவும் உதவும் செயலிகள் நிறைய இருக்கின்றன. அவை இலவசமாகவே கிடைக்கின்றன. இணைய தளத்தில் செயல்படும் செயலிகளும் தனித்து உங்கள் கணினியிலேயே செயல்படும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது யாஹு அறிமுகப் படுத்தியிருக்கும் இந்த வசதியை யாஹு அஞ்சல் குழுமங்களைப் படிக்க மட்டுமல்ல, வேறு எந்த XML ஊட்டுக்களை தரும்பிளாக்குகள், இணைய தளங்கள் ஆகிவற்றையும் யாஹுவில் இருந்தபடியே அணுக இயலும்.
வலைப்பூக்கள் சாதாரண இணைய தளம் போலல்லாமல் xml கட்டமைப்புடன் தரவுகள் சேமிக்கப்பட்டு பின்னர் பக்கங்களாக வெளிக்காட்டப்படுவதால் அடிப்படையிலேயே RSS ஊட்டுகளை தர இயலுகிறது.
இனி இந்த RSS படிப்பான்கள் பற்றியும் பயன்படுத்துவது பற்றியும் காண்போம்.
2
RSS ஊட்டுக்களைப் படிக்க நிறைய செயலிகள் உண்டென்று சொன்னோம். இந்தச் செயலிகள்இணையத்தில் இயங்குபவனவாகவும் தனித்து இயங்குபவனவாகவும் இருக்கின்றன.
வெப்தளங்களில் இயங்கும்
http://www.bloglines.com/ போன்ற நூற்றுக் கணக்கான "அக்ரிகேட்டர்" அல்லது "நியூஸ் ரீடர்" எனப்படும் RSS படிப்பான்கள் நிறையவே இருக்கின்றன. இணையத்தில் துழாவினால் நிறையவே கிடைக்கும். நீங்கள் படிக்க விரும்பும் செய்தித் தலைப்புக்களின் RSS முகவரியை இட்டால் அங்கிருந்தே செய்திகளின் தளத்திற்குச் சென்று முழுவதையும் படிக்கலாம்.
RSS என்று பொதுவாகச் சொன்னாலும் அவற்றிலும் வித்தியாமான நிர்ணயம் உண்டு. 0.9, 1.0,2.0 மற்றும் புதியதாக வந்திருக்கும் atom போன்றவை xml கோப்பின் அடிப்படையிலே இயங்குகின்றன. என்றாலும் சில வேறுபாடுகள் உண்டு, இப்போது கிடைக்கும் படிப்பான்கள் எல்லா வகைகளையும் கையாளுபவையாக இருகின்றன.
தனித்தியங்கும் RSS படிப்பான்களும் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன."ராக்கெட் இன்போ" (
www.rocketinfo.com), ஆர் எஸ் எஸ் ரீடர் (www.rssreader.com) போன்றபலவற்றைக் குறிப்பிடலாம். FreeReader என்ற படிப்பான் 98 இல் இயங்கும். மேலே குறிப்பிட்ட மற்றவையும் 98 இயங்கும் ஆனால் .NET Framework 1.1 கணினியில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். நான் பார்த்தவைகளில் எனக்குப் பிடித்தது RSS Bundit தான். நிறையவே வசதிகள் இருக்கின்றன.
இம்மாதிரி வசதியை யாஹ¥வும் அளிப்பதுதான் இப்போது நம்மிடையே பலரைஈர்த்திருக்கிறது. யாஹ¥ குழுமங்கள் பலவற்றில் நாம் உறுப்பினராக இருக்கக் கூடும்.ஒவ்வொன்றாகவோ அல்லது ஒவ்வொன்றிற்கும் ஒரு சாரளமோ திறந்து பார்க்கவேண்டியிருக்கிறதல்லவா? இனி அவ்வாறில்லாமல் ஒரே இடத்திலிருந்து அவைகளைக்காணமுடிவதல்லாமல் புதியதாக அஞ்சல் ஏதும் வந்தால் அவைகளும் சேர்ந்து கொள்ளும்.
கீழே காண்பதுபோல் செய்து சோதித்துப் பாருங்களேன்.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
1.
http://my.yahoo.com தளத்திற்குச் செல்லுங்கள்.2. "Choose Content" என்ற பொத்தானைச் சொடுக்குங்கள்.3. My Yahoo! Essentials என்பதில் "RSS Headlines (BETA)" ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள்.4. "Finished" பொத்தானை அழுத்தி நிறைவு செய்யுங்கள். ("My Yahoo" விற்கு திரும்பி வந்திருப்பீர்கள்)5. அடுத்து "Add/Delete" பொத்தானை அழுத்துங்கள். இனி வரும் பக்கத்தில் Page Settings என்பதன் கீழே காணும் "Refresh Rate:' என்ற பட்டியலில் பல நிமிட அளவுகளைக் காண்பீர்கள். இந்த நிமிட அளவு, "My Yahoo!" முகப்புப் பக்கம் எத்துனை நிமிடங்களுகொருமுறை மீளேற்றம்(refresh)செய்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும். தேவையான நிமிட அளவைத் தேர்ந்தெடுங்கள்.6. "Finished" பொத்தானை அழுத்தி நிறைவு செய்யுங்கள்.
இனி RSS ஊட்டுக்களைக் கொடுக்கும் இணைப்பு முகவரிகளை ஒவ்வொன்றாக உள்ளிடலாம். இந்தஊட்டுக்களை தரும் மின்னஞ்சல் குழுக்களோ, வலைப்பூக்களோ, இணைய தளங்களோஎதுவாயினும் உள்ளிடலாம்.
யஹு மடற்குழுவில் கிடைக்கும் RSS சுட்டி கீழ்க் கண்டவாறு இருக்கும்:
http://rss.groups.yahoo.com/group/XXXXXXXXXX/rssஇதில் XXXXXXXXXX என்பது குழு பெயர்.
எடுத்துக்காட்டாக, தமிழ் உலகம்
http://rss.groups.yahoo.com/group/tamil-ulagam/rssஎன்றும்,
இ-உதவி
http://rss.groups.yahoo.com/group/e-uthavi/rssஎன்றும் இருக்கும்.
இவற்றை மேற்கூறப்பட்டவாறு உள்ளிடுங்கள்.மேலும் நண்பர் பத்ரியின் இந்தச் சுட்டியையும் உள்ளிட்டு அவருடைய "எண்ணங்களை"உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்:
http://thoughtsintamil.blogspot.com/rss/index.rdf
RSS ஊட்டுக்களைக் கொடுக்கும் தளங்களை எப்படி அறிந்து கொள்வது? அந்தந்த தளங்களுக்குச் செல்லும்போது மேலே கூறியதுபோல் செஞ்சதுரங்களைக் கொண்டோ அல்லது அதற்கான சுட்டிகளுடன் கொண்ட அறிவிப்பைக் கொண்டோ தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றாலும் கவலையில்லை. பெரும்பாலான "படிப்பான்கள்" வலைத்தளதின் முகவரியைக் கொடுத்தாலே அங்கு RSS வசதி இருக்கிறதா என்று கண்டறிந்து RSS சுட்டியை தன்னுள் பதித்துக் கொள்ளும்.
3
தற்போது வலைப்பூகளைத் தவிர செய்திகளைத் தரும் வேறு தமிழ்த் தளங்களில்இந்த வசதி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விரைவில் வரும். வலைப் பூக்களிலும் அவரவர் அறிந்தோ அறியாமலோ இந்த வசதி கிடைக்கிறது.இதனை நன்கு அறிந்து வைத்திருப்போர் தங்கள் தளங்களில் இம்மாதிரியான வசதி கிட்டுகிறது என்ற அறிவிப்பையும் தருகின்றனர். அடிப்படையில் அனேக வலைப் பதிவுகள் "ஸ்க்ரிப்ட்" களைக் கொண்டும் தரவு தளமாக xml ஐக்கொண்டும் இயங்குவதால் RSS கோப்புக்குத் தேவையான தவல்களை தொகுப்பது எளிதாகிறது. அப்படியானால் சாதாரண வலைத் தளங்களில் RSS ஊட்டுக்களைப்படுத்த இயாலாதா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தாராளமாகப்பயன்படுத்தலாம். ஏகப்பட்ட வலைத் தளங்கள் பயன்படுத்துகின்றன. அடிக்கடிபக்கங்களைச் சேர்ப்போருக்கும் பக்கங்களில் உள்ள தகவல்களை பல முறைமாற்றுவோருக்கும் கூட இது ஒரு வரப் பிரசாதம். எடுத்துக் காட்டாக மென்பொருள் துறை, பல்பொருள் விற்பனைத்துறை போன்றவற்றைக் குறிப்பிடலாம் நுகர்வோருக்கு தங்கள் பொருட்களின் புதிய வரவுகளையும் விலைகளையும் அறிதயத்தர விரும்பும் முதலானோர் இதைப் பயன்படுத்தலாம்.
சுருக்கமாகச் சொன்னால் தங்களின் செய்திகளை, அறிவிப்புக்களை பிறரிடம் விரைவாகக் கொண்டு செல்ல விரும்புவோர் யாராயினும் இதைப் பயன்படுத்தலாம். அது செய்தித் துறையாகட்டும், வணிகத் துறையாகட்டும் அல்லது இன்ன பிறவாகட்டும். இந்த RSS ஊட்டு, பக்கங்களின் முழுச் செய்திகளையும் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. (சில ஊட்டுக்கள் முழுச் செய்தியைகொடுப்பனவாகவும் உண்டு). குறைந்த அளவாக, தலைப்பு, அந்தப் படிவத்தின் சுட்டி, அந்த படிவம் எதைப் பற்றியது என்ற ஒரு சிறு குறிப்பு, யாரால் அந்தப் படிவம் எழுதப் பட்டது, எப்போது எழுதப் பட்டது என்பன போன்ற குறிப்புக்கள் போதுமானதாகும். மிகவும் குறைந்த அளவாக தலைப்பு, அதன் சுட்டி ஆகியவையாவது இருக்க வேண்டும். மேற்கண்ட குறிப்புக்கள் கொண்ட ஒரு தொகுப்பு, ஒரு தொகுதியாக (item) கருதப்படும். இவ்வாறே ஒவ்வொரு ஆக்கத்திற்கும் ஒரு தொகுப்பாக வரையறுக்கப் பட்டிருக்கும்.
இதை உங்கள் தளங்களிலும் பெற வேண்டும். என்ற எண்ணம் வருகிறதா? நல்லதுதான். அதை உருவாக்கி தளங்களில் சேர்ப்பது கடினமானதா? அப்படியெல்லாம் கடினமானதில்லை.மீயுரை குறியீட்டில் (HTML) சில வரிகள் எழுதத் தெரிந்தாலே போதும்.இதை எழுத "நோட்பேட்" போதுமானது. ஒருமுறை சரியான ஒரு படிவத்தை எழுதிவிட்டால் அதை வைத்தே (template) புதியதையும் எழுதலாம்.
சரி, RSS ஊட்டுகளில் பல வகைகள் இருக்கின்றன என்று பார்த்தோம். அதில் எந்த வகையைத் தேர்ந்தெடுப்பது? புதியதும் மிக எளிதானதுமாக இருப்பது RSS 2.00 தான்.
4
RSS ஊட்டுக்களுக்காக XML வகை கோப்புக்களைப் பயன்படுத்துவதாகக் கண்டோம்.அந்த கோப்பை எந்த முறையில் உருவாக்கினாலும் சரி; அடிப்படையான இரண்டுவிடயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
1. XML கோப்புக்களுக்கான விதி..2. எந்த வகை RSS ஊட்டைப் பயன்படுத்துகிறோமோ அந்த கட்டமைப்பின் விதி.
வெப் தளம் வைத்திருப்போர்(அல்லது பராமறிப்போர்) மீயுரை(HTML) எழுதப்பட்டிருக்கும் விதம் பற்றி அறிந்திருப்பார். XML உம் அதன் சகோதரிதான் என்றாலும் சற்று கண்டிப்பானவள். மீயுரை சற்று இலகுப் போக்குக் கொண்டது. தவறாக எழுதினாலும் கோபித்துக் கொள்ளாது. மேல் தட்டு,கீழ்த்தட்டு எழுத்து வரிசைகளை (upper & lower case) பாவித்தாலும் அதற்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால் XML இல் ஒரு ஒழுங்கைக் கடைப் பிடிக்கவேண்டும்.மீயுரையில் Arial என்று எழுதினாலும் Arial என்று எழுதினாலும் ஒன்றுதான். ஆனால் XML இல் ஒரே ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறே வரிசை முறையையும் கடைபிடிக்க வேண்டும்.
அடுத்து RSS ஊட்டின் அமைப்பு ஒழுங்கு பற்றி:1. எந்த வகை RSS ஊட்டு என்பது பற்றி.2. அந்த ஊட்டின் சானல் (channel) அடக்கம்.
channel என்பதினுள்ளே இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று உங்கள்தளத்தைப் பற்றிய சில விபரங்களும், மற்றும் ஒவ்வொரு item என்பதாகநீங்கள் சுட்ட விரும்பும் ஆக்கத்தின் விபரமும் இருக்கும். item எண்ணிக்கைஎத்தனையாகவும் இநுக்கலாம் இருக்கலாம். ஒவ்வொரு item மும் குறைந்த பட்சம்ஆக்கத்தின் தலைப்பு, சுட்டி ஆகியவைகளையாவது கொண்டிருக்க வேண்டும்.
கீழே ஒரு அயிட்ம் கொண்ட ஒரு சிறிய RSS ஊட்டுக் கோப்பைக் காண்போம்.


முதல் வரி இந்த கோப்பு ஒரு XML கோப்பு என்பதையும் இரண்டாவது வரி RSS கோப்பின் எந்த வகை என்பதையும் காட்டுகிறது. என்பது நீங்கள் தரும் விபரத்தின் அடக்கம்(அல்லது வழி?) என்பதைக் குறிப்பதாகும்.
அதன் கீழே இருக்கும் முதல் பந்தி(3 வரிகள்) உங்கள் தளத்தைப் பற்றியதாகும். எனத் துவங்கும் இரண்டாவது பந்தி நீங்கள் அளிக்க விரும்பும் ஆக்கதின் விபரமாகும். இதில் தலைப்பு, சுட்டியின் முகவரி இரண்டை மட்டுமே தந்திருக்கிறோம். இம்மதிரி ஒவ்வொரு ஆகியபட்டிகளிகிடையே ஒவ்வொரு ஆக்கத்தைப் பற்றிய விபரத்தைத் தர வேண்டும். இமாதிரி எத்தனை item வேண்டுமானாலும் இருக்கலாம்.
இறுதியில் இந்தச் சேனலின் உள்ளடக்கம் முடிந்துவிட்டது என்பதைக் குறிக்க
என்ற முடிவுப் பட்டியையும் RSS கோப்பு நிறைவடைகிறது என்பதைக் குறிக்க பட்டியையும் இட்டு முடிக்கப் பட்டிருக்கிறது. எளிமையாக இல்லை?
5
எளிமையாக ஒரு xml கோப்பை உருவாக்கிவிட்டோம். எளிமையாக இருப்பதாலேயே தவறுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. காரணம் வெறும் "டெக்ஸ்ட் எடிட்டரில்" இதை உருவாக்கும்போது எந்த சிக்கலும் இல்லாமல் உள்ளீடை ஏற்றுக் கொள்ளும். எனவே தவறு நடந்தாலும் தெரியாது. அதைப்பயன்படுத்தும்போதுதான் சிக்கல் தோன்றும். மீண்டும் திருத்த நேரிடும்.
நாம் ஏற்கனவே கண்டபடி பல "ப்ளாக்" தளங்கள் தாமாகவே இந்த ஊட்டுக்களை உருவாக்கும் திறன் கொண்டவை. சில தளங்கள் பிறருக்காவும் இம்மாதிரி ஊட்டுக்களை செய்து தரும் சேவையையும் அளிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தளம் மூலமே செய்ய வேண்டும். மேலும் விளம்பரங்களும் அவற்றுடன் சேர்ந்து கொள்ளும்.
இங்கு தானியங்கும் ஊட்டு உருவாக்கத்தைப் பற்றி நாம் பேசவில்லை. நாமாவே பயிர் செய்து நெல் குத்தி சமைக்கும் விதத்தையே பார்க்கிறோம். என்னதான் நாமாகச் செய்தாலும் வெறுங்கையால் செய்தால் செம்மையாகுமா? உபரணம் வேண்டாமா? இதோ ஏழையின் உபகரணம்(poor man's tool) ஒன்றை உருவாக்கித் தந்திருக்கிறேன்: "A Simple RSS Feed Creator". உங்களுக்குத் தேவையான RSS ஊட்டை உங்கள் கணினியிலே உருவாக்கிக்கொள்ளலாம். இது எந்த வழங்கியையும்(server) சார்ந்திராததால் RSS_generator.html கோப்பை உங்கள் கணினியிலேயே சேமித்துக்கொள்ளலாம். இது ஒரு எளிமையான செயலி(8kb மட்டும்). என்றாலும் முன்பு சொன்ன தவறு ஏதும் நேரா வண்ணம் RSS கோப்பை உருவாக்க வகை செய்யும்.
தேவையான உள்ளீடுகளை செலுத்திவிட்டு "Next Item" பொத்தானை அழுத்தி ஒவ்வொரு ஆக்கத்திற்கான "Item" தொகுப்புக்களைச் செலுத்தியபின் "Finish" பொத்தானை அழுத்தினால் xml கோப்பின் (with professional look!)முழு வடிவமும் கிடைத்துவிடும். "Copy" பொத்தானை அழுத்தி பின் "நோட்பேடில்" அதை ஒட்டி தேவையான பெயருடன் xml (*.xml) கோப்பாக சேமித்துக் கொள்ளலாம்.
அதை இங்கே பெற்றுக் கொள்ளலாம்:
http://www.geocities.com/csd_one/RSS_generator.html
Date & Time ஐப் பெறுவதற்கு அதன்மீது சொடுக்கினாலே போதும். மேலும் Date & Time அமைப்பைப் பாருங்கள் இது ஒருவகை தர நிர்ணயத்திற்குட்பட்டது. நீங்கள் கையால் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதன் அமைப்பு(format) மாறாமல் செய்ய வேண்டும். ஏனிப்படி? நாம் உருவாக்கிய கோப்பு சரி என்பதை எப்படி அறிந்து கொள்வது? இதற்கெல்லாம் மேல், இந்தகோப்பை எப்படி பயனுறச் செய்வது?
6
இந்த RSS ஊட்டு கோப்பைப் பற்றிச் சொல்லும்போது இரண்டு விடயங்களைப்பற்றிச் சொன்னோம். ஒன்று xml கோப்பின் அமைப்பு. இரண்டாவது, RSS ஊட்டின் தர நிர்ணய அமைப்பு. முதலாவதை நான் முன்பு தந்த செயலி மூலம் (RSS_generator.html) அடைந்து விட்டோம். அதாவது, xml கோப்பின்கட்டுப்பாட்டை மீறாதவாறு செய்து விட்டோம். ஆனால் உள்ளிடுவது நம் கையில்தானே இருக்கிறது? அந்த உள்ளீடு RSS தர நிர்ணயத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக தேதி நேரத்தை குறிப்பிடுவதைப் பற்றியதாகும்.நாம் பேசிக் கொண்டிருக்கும் version "2.0" இல் RSS_generator.html செயலியில் கண்டது போல அது இருக்கவேண்டும்.(வெவ்வேறு தர நிர்ணயங்களை ஒட்டி இதன் அமைப்பு மாறலாம்).
இந்த தேதி, நேரம் இல்லாமல் கூட RSS கோப்பை உருவாக்கலாமா? ஆம் உருவாக்கலாம். நாம் தொடக்கதில் கண்டது போல் வெறும் தலைப்பு மற்றும் அதன் சுட்டி ஆகியவையே போதும். பெரும்பாலான ஊட்டுக்கள் தலைப்பு, சுட்டி, சிறு குறிப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்டிருக்கின்றன. இங்கு தேதியைப் பற்றி குறிப்பிட்டதற்குக் காரணம் ஒன்று RSS இன் கட்டமைப் பற்றிச் சொல்வதற்கும் மற்றாது அதன் பயனைப் பற்றிச் சொல்வதற்கும்தான்.
பல RSS படிப்பான் செயலிகள் இந்த தேதி, நேரம் ஆகிவைகளை வைத்துக்கொண்டு இந்த ஆக்கத்திற்கு எத்தனை வயது என்று சொல்கின்றன. குறிப்பாக செய்தி நிறுவனங்கள் செய்திகளை பரிமாறிக்கொள்ளும்போது இது மிகத் தேவையான ஒன்றாகும். "சதாம் ஹுசைன் பிடிபட்டார்" என்று ஒரு செய்தி இருந்தால் 'இரண்டாவது முறையாக எப்போது பிடிபட்டார்?' என்று யாராவதுஎண்ணினால்?:-)
ஆக இம்மாதிரி தேதியை, நேரத்தை கணக்கிட வேண்டுமானால் அதை படிப்பான்களால் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். தேதி இருக்கும் இடத்தில் நேரத்தை இட்டால் குழம்பிவிடும் அல்லவா? ஆக, தெரிவிக்க வேண்டியதை சரியாகத் தெரிவிக்க வேண்டும். என் நண்பன் சொன்ன ஜோக்:மாடிப்படி வழியாக இருவர் ஏறிப் போய்க் கொண்டிருந்தனர். ஒருவர் நம்மவர்; மற்றவர் மலையாளி. மாடிப்படி மூலையில் ஏதோ மலையாளத்தில் எழுதியிருக்கக் கண்டு "என்ன எழுதி இருக்கிறது?" என்று நம்மவர் மற்றவரை வினவ, அவரும் மலையாளம் கலந்த தமிழில் "இங்கு எச்சில் துப்புரது" என்று சொல்ல, நம்மவர் வாயில் குதப்பி இருந்த வெற்றிலையை பளிச்சென்று துப்பிவிட்டு போனாராம். "எச்சில் துப்பாதே" என்பதாக மலையாளத்தில் எழுதியிருந்த வாசகம்தான் அது. மலையாளத்தில் "..ரது" போட்டால் "கூடாது" என்பது நம்மவருக்குத் தெரியாது பாவம். இந்த கதைபோல் ஆகிவடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வரைமுறை. ;-)
சரி, நாம் உருவாக்கிய கோப்பு சரியாக இருக்கிறது என்பதை எப்படிப் பார்ப்பது? கவலை வேண்டாம். இதற்கு சில (தொண்டாகச் செய்ய) வலைத்தளங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் உங்கள் RSS கோப்பின் முகவரியைத் தந்தால் அந்தந்த தரத்திற்கொப்ப அது முறையானதா என்று சொல்லிவிடும். இல்லையென்றால் எங்கெங்கு குறையுண்டு என்று காட்டிவிடும். இது மற்றபடிப்பான்களில் சிக்கலின்றி அந்த RSS ஊட்டுக்குகளைப் படிக்க இயலும் என்பதைஉறுதி செய்கிறது.
RSS ஊட்டுக்களைச் சரிபபர்க்க உதவும் தளஙகளின் ஒன்றுதான்
http://feedvalidator.org/ ஆகும். எளிமையானதும் அதிக விபரங்களை தரக் கூடியதுமாகும்.
உங்களது கோப்புக்கள் சரியானது என்பதை உறுதி செய்ய இந்த தளத்தினுள் காணும் உள்ளிடு பகுதியில் RSS கோப்பின் முகவரியை இட்டால் அதைப் பகுத்து என்ன குறை என்று சொல்லிவிடும். அதைச் செப்பனிட என்ன செய்யவேண்டும் என்ற உதவியும் கிட்டும்.
கீழ்க் காணும் இரண்டு மாதிரிக் கோப்புக்களை ஒவ்வொன்றாக
http://feedvalidator.org/ தளத்தில் உள்ளிட்டு வரும் முடிவுகளை நீங்களே அறிந்து கொள்ளுங்களேன்!
http://www.geocities.com/csd_one/rss/sang.xml
http://www.geocities.com/csd_one/rss/sang2.xml
7
மேற்கண்ட இரண்டு கோப்புக்களையும் validate செய்து பார்த்திருந்தால் ஒன்றில் (sang2.xml) பிழை இருப்பதை அறிந்திருப்பீர்கள். பிழை இரண்டு வகைப்படும் ஒன்று எச்சரிக்கை. மற்றொன்று பிழை. இதில் முந்தையது இருந்தாலும் அந்த கோப்பு சரியானது என்று கருதப் படும். என்றாலும்பிழைகளைத் திருத்தி உறுதி செய்து கொள்வது நலம். இல்லையானால் சில படிப்பான்களால் சரியாகக் கையாள இயலாமல் போய்விடும்.
சரி, இப்போது எல்லாம் ஆகிவிட்டது. அடுத்தது அந்தக் கோப்பை வழங்கியில் (சர்வர்) ஏற்ற வேண்டும். அத்தோடு நம் வேலை முடிந்துவிட்டதா? மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டாமா? முதலில் உங்கள் தளத்தில் முன் பக்கத்தில் உங்கள் தளம் RSS ஊட்டு வசதியை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். அதன் சுட்டியையும் (இப்போது சர்வரில் ஏற்றிய RSSகோப்பின் சுட்டி) தர வேண்டும் மேலும் சுட்டியுடன் இந்தச் சிறிய icon ஐயும் சேர்த்துத் தாருங்கள்.
http://www.geocities.com/csd_one/rss/xml.gif
இந்த gif கோப்பை உங்கள் xml கோப்பு இருக்கும் இடத்திலேயே இட்டுக் கொள்ளுங்கள். இந்தச் சிறு செஞ்சதுரம் உங்கள் தளம் RSS வசதி கொண்டது என்பதை உங்கள் தளத்திற்கு வருவோருக்கு உணர்த்தும்.
உங்கள் தளத்தில் இதை இட்டுக் கொண்டால் மட்டும் போதாது. பிறருக்கு அஞ்சல் முலம் தெரிவிக்கலாம். அறிந்தவர்களுக்கு மட்டுமேதான் அஞ்சலில் தெரிவிக்க இயலும் இன்ன பிறருக்கு தெரிவிக்க வேண்டுமானால் சில தேடுதளங்களில் பதியவேண்டும். RSS ஊட்டுக்களை தேடித்தரும் தளங்கள் பல உள்ளன. இவற்றிற்கும் நாம் காணும் பிற தேடுதளங்களுக்கும் வித்தியாசமுண்டு. இவை அவ்வப்போது உங்கள் தளைத்திலுள்ள RSS கோப்பை அவதானித்துக் கொண்டே இருக்கும். அந்தக் கோப்பில் புதிய பதிவோ அல்லது மாற்றமோ இருந்தால் புதுப்பித்துக்கொள்ளும்.
http://www.syndic8.com/suggest.php?Mode=data
http://www.feedster.com/add.php
http://reader.rocketinfo.com/desktop/AddRSSFeed.jsp
http://ngoid.sourceforge.net/add_rss.php
http://dynalinks.dyndns.org/?section=addlink
போன்றவை ஒரு சிலவாகும்.
சில தளங்கள் "பிங்"(ping) வசதியும் கொண்டிருக்கின்றன. அதாவது உங்கள் தளத்தில் ஆக்கங்ளின் புதிய சேர்ப்புக்களுப்ப புதிய RSS கோப்பை மாற்றுவீர்கள் அல்லவா? அப்போது இந்த தேடு தளங்களுக்கு உடனே தெரிவிக்கவேண்டுமானால் அதனையும் செய்ய இயலும்
8
இனி, நம்முடைய RSS கோப்பு எப்படி இயங்குகிறது என்பதைப் பார்க்கவேண்டாமா? RSS படிப்பான்கள் நிறையவே இருக்கின்றன என்று பார்த்தோம்.அவைகளில் தனித்தியங்குபவையும் உண்டு, இணையத்தில் இயங்குபவையும் உண்டு.நமக்கு பரிச்சயமான யாஹ¥வும் இந்த்ச் சேவையைத் தருகிறது என்று அறிந்தோம்.
யாஹு தரும் பல சேவைகளில்
http://my.yahoo.com உம் ஒன்று. இங்கு உங்களுக்குத் தேவையான யாஹு தொடர்பான எல்லா விடயங்களியும் ஒரு சேர காணலாம். கிட்டத்தட்ட 'ஹோம் பேஜ்' மாதிரி. இங்கு நாம் முன் சொன்ன RSS படிப்பான் வசதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.. நேரடியாகhttp://my.yahoo.com தளத்திற்குச் சென்றும் செய்யலாம். அல்லது ஒரே சொடுக்கில் கீழ்க்கண்டவாறும் செய்யலாம்:
http://e.my.yahoo.com/config/addxcontent?.url=[feedurl]
மேற்கண்ட சுட்டியில் [feedurl] என்பது நீங்கள் ஏற்கன்வே ஏற்றி வைத்திருக்கும் RSS (xml) கோப்பின் சுட்டி ஆகும் (சுட்டியை உள்ளிடும்போது அடைப்பான் [ .... ] பயன்படுத்தாதீர்கள்)இங்கு நம் எடுத்துக்காட்டை எடுத்துக் கொண்டால் இப்படி இருக்கும்:
http://e.my.yahoo.com/config/addxcontent?.url=http://geocities.com/
csd_one/rss/sang.xml
ஆக இருக்கும். வரும் பக்கத்தில் உள்ள "Add" பொத்தானை அழுத்தி அந்த ஊட்டை சேர்து விடலாம். இவ்வாறு எந்த RSS ஊட்டையும் சேர்க்கலாம். இனி யாஹ¥ தொடர்ந்து அந்த சுட்டியைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். புதியன ஏது வந்தால் அதன் பட்டியலில் இடம்பெறும்.
இம்மாதிரியான வலைத்தள படிப்பான்கள் நிறைய இருக்கின்றன அவற்றுள் சில:
Active Web Reader
http://www.deskshare.com/awr.aspx
AmphetaDesk - a free, cross platform, open-sourced,syndicated news aggregator. Mac, Windows, Linux:
http://www.disobey.com/amphetadesk/
Fastbuzz Newshttp://www.fastbuzz.com/
Feed-Me.Info - Online News Readerhttp://www.feed-me.info/
இவையன்றி மொசில்லாவுடன் இணைத்துக் கொள்ளும் படிப்பன்களையும் தருகின்றனர்:
For Mozilla Firebird 0.7 v1.68: rssreader_168.xpi
http://fls.moo.jp/moz/rssreader/rssreader_168.xpi
For Mozilla Firefox 0.8 v1.7: rssreader_170.xpihttp://fls.moo.jp/moz/rssreader/rssreader_170.xpi
இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவைகளையன்றி உங்கள் கணினியுள்ளேயே பொருத்தி, வேண்டியபோது (off-line) படிக்க வகை செய்யும் மேலும் சில செயலிகள்:
Abilon
http://www.activerefresh.com/abilon.phpஇது ஒரு சிறிய, (வெறும் 364 kb) அளவுள்ள எளிய செயலி.
Feedreader
http://www.feedreader.com/இது W98 இலும் தொழிற்படும்.
Awasu
http://www.awasu.com/
என்னுடைய தேர்வு RSSbandit.www.rssbandit.orgஇதில் நிறைய வசதிகளிருக்கின்றன.
இணையத்தைத் துழாவினால் நிறையவே கிடைக்கும். ஒவ்வொன்றையும் சோதித்தறிதலுக்கே நேரம் போதாது. நான் குறிப்பிட்டவைகளைவிட நல்ல செயலிகள் கூட கிட்டலாம். ஒரு நாளுக்கு நான்கைந்து என்று புதிதாக வந்துகொண்டே இருக்கின்றன.
இனி, இந்த RSS ஊட்டு உருவாக்கம், நடைமுறைப்படுத்துதல் "updadte" செய்தல் போன்றவற்றில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வது பற்றி பார்க்கலாம். (இறுதிப் பகுதியாக அமையும்)
9ஒவ்வொரு முறை புதிய ஆக்கம் அல்லது மாற்றம் நிகழும்போது இந்த RSS கோப்பிலும் அந்த மாற்றம் பதிப்பிக்கப் படவேண்டும். ஒரு இயற்கையான வினா தோன்றலாம். "ப்ளாக்கு"கள் RSS ஊட்டு வசதியைத் தருகின்றன என்றறிந்தோம். ஒவ்வொரு முறையும் இப்படி ஆக்கங்கள் புதிதாகச்சேர்க்கப்படும்போதோ அல்லது மாற்றப் படும்போதோ RSS கோப்பை நாம் உருவாக்க அல்லது மாற்ற வேண்டுமா என்று எண்ணலாம். "ப்ளாக்'குகளில் அந்த நிகழ்வு தானே நடக்கிறது. நல்ல தரவுதள கட்டமைப்பில் உள்ள asp, php போன்ற தளங்களில் இயங்கும் இணையதளங்களிலும் இந்த வசதியை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் இங்கு நாம் வெப் தளங்களில் இந்த வசதியை எப்படிப் பெறுவது என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
நாம் தொடக்கத்தில் சொன்னபடி xml கோப்புக்களைத் திருத்தும்போது அதன் கட்டமைப்பு மாறாமலும் RSS தரத்தின்(எந்த வகையோ அதற்கொப்ப) வரைமுறை மீறப்படாமலும் இருக்க வேண்டும் என்று அறிவோம். (இங்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது RSS Version 2 ஆகும்)
முன்னர் கூறியபடி தேதியை உள்ளிடுவதை எடுத்துக் கொள்வோம். RSS Ver2 இன்படி இப்படி இருக்க வேண்டும்:
Wed, 07 Jul 2004 12:13:39 +0530அல்லதுWed, 07 Jul 2004 06:43:39 GMT
மேற்கண்ட ஒன்றில் ஏதாவதாக இருக்கவேண்டும். முதலாவது உள்ளுர் நேரத்தையும்,இரண்டாவது க்ரீன்விச் நேரத்தையும் குறிக்கிறது. இதில் ஏதாவது சிறிய வித்தியாசம் நேர்ந்தாலும் அந்தப் படிவம் சரியானதாகக் கருதப் படாது. எனவே கையால் திருந்தும்போது தவறு நேரலாம்.
இன்னொரு சிக்கல் சில எழுத்துகளை, குறியீடுகளை உள்ளிடுவது பற்றி. குறிப்பாக & < > போன்றவற்றை நேரடியயக உள்ளிட இயலாது. அது சிக்கலைத் தோற்றுவிக்கும். அதற்கு இண¨யான மீயுரை குறியீடுகளை இடவேண்டும்.அவை இப்படி இருக்கும்:
&amp;amp;amp;amp;amp;amp; = &> = >< = < மேலும் சில எழுத்துக்கள் அந்த xml கோப்பில் குறிப்பட்டிருக்கும் என்கோடிங்களில் சேராத ஒன்றாக இருக்குமானால் பிசகு என்று அந்தக் கோப்பு எகிறிக்கொள்ளும். ஒரு xml கோப்பை தயாரிக்கும்போது அது யுனிகோடில் தயாராவதாகத்தான் கருதப் படும் அதாவது என்கோடிங் ஏதும் குறிக்கப்பட்டிருந்தால் ஒழிய. வேறு என்கோடிங்கில் தரவு இருக்குமானால் அந்த என்கோடிங்கைக் குறிப்பிட வேண்டும்.எடுத்துக் காட்டாக யுனிகோடில்லாத வேறு வகையாக(ISO-8859-1) இருக்குமானால் அதைக் குறிப்பிடவேண்டும் (). இதையும் அவதானமமகச் செய்யவேண்டும்.இல்லையென்றால் "இது எனக்குத் தெரியாது; எனக்குத் தெரிந்த UTF-8 ஐத்தான் நான் எடுத்துக் கொள்வேன்" என்று சாதித்து UTF-8 ஆகவே பாவித்துக்கொள்ளும்.
ஆக, இந்தத் தொல்லைகளைச் சமாளித்தாக வேண்டும்.
10RSS ஊட்டு பற்றி மேலும் சில தகவல்கள்:முதலில் இதைத் தொடங்கி வைத்த பெருமை நெட்ஸ்கேப்பையே சாரும். மைக்ரோசாப்ட்டின் கைங்கரியத்தால் கலங்கிப் போயிருந்தாலோ என்னவோ இதில் கவனம் செலுத்தாமல் கைவிட்டு விட்டது. UserLand என்ற நிறுவனம் இதைக் கையிலெடுத்துகொண்டது. இப்போது செய்தி பரிமாற்றங்களில் மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது.
RSS வகையில் பல இருக்கின்றன என்று பார்த்தோம். என்றாலும் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம். பொதுவாக எல்லாமே RSS என்று அழைக்கப்பட்டாலும் RSS 1.0 என்ற வகை சற்று வித்தியாசமானது. xml இன் துணை அமைப்பான RDF என்ற வகையைச் சார்ந்தது. இதன் அமைப்பு சற்று சிக்கலாக இருக்கும். இந்த முறை RDF Site Summary (RSS) என்று அழைக்கப்படுகிறது (Rich Site Summary என்று அழைக்கப் படுவதும் உண்டு -எப்படியானும் RSS மாறப் போவதில்லை). RSS 0.91, 0.92, 2.0 ஆகியவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இப்போது இவையேபெரும்பாலோரால் பயன்படுத்தப் படுகிறது
xml பாவனைக்கு வந்த பின் தகவல் பரிமாற்றத்தில் நிறையவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. இதன் சிறப்புக் குணங்களில் முக்கியமானது, சாதாரணமாக நாம் புழங்கும் உரை வடிவிலேயே (text format) தரவுகளை பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் சில விதிகளைக் கடைபிடிக்கவேண்டும். உரைவடிவில் இருப்பதால் கையால் எழுதுவது சுலபமாக இருந்தாலும் விதிகள் மீறப்படமல் இருப்பது அவசியம்.
நம் RSS ஊட்டிலும் இம்மாதிரியான சிக்கலை எதிர் நோக்குவதால் கை மீறிவிடாமல் இருக்க சில உபகரணங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. இதனை மனதில் கொண்டு ஒரு சிறிய செயலியை உருவாகி நான் பாவிக்கிறேன். முன்னர் தந்த (html file) செயலியில் xml இன் கட்டமைப்பைக் கொண்டு வந்தாலும் உள்ளிடுவதில் தவறு இருந்தால் அந்த RSS கோப்பு சரியானதாக இல்லாமல் போய்விடும்.
இந்தச் செயலி விண்டோசின் எந்தத் தளத்திலும் இயங்கும். ஒரு நிபந்தனை: IE5 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு கணினியில் இருக்க வேண்டும்.
இதில் புதிய xml கோப்பை உருவாக்கலாம். முன்பு உருவாக்கியதை மீண்டும் ஏற்றி மாற்றங்கள் செய்யலாம். இணையத்திலிருந்து xml கோப்புக்களை இறக்கியும் மாற்றங்கள் செய்யலாம். குறிப்பாக, இணையத்தளம் வைத்திருப்போர் தாம் படித்தவைகளை, பயனுள்ளவகைகளை ஒரு "டைஜஸ்ட்" வடிவில் பிறருக்கு கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். பெரும்பாலும் தங்கள் தளத்தில் அவற்றை ஏற்றியோ அல்லது அவற்றின் இணைப்பைத் தந்தோ அவற்றைபரிமாறிக் கொள்வது வழக்கம். அம்மாதிரியான விடயங்களுக்கு இது பயன்படும். மேற்கொண்டு விபரங்கள் அதன் உதவி ஆவணத்தில் காணலாம்.
இந்த செயலி முழுமையாக ஆகிவிட்டது என்று சொல்ல மாட்டேன். இது உங்களுக்குபயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி. நல்லதோ அல்லது பிழை கண்டாலோ ஒரு வரி எழுதிப் போடுங்கள்.


அதன் சுட்டி:http://www.geocities.com/csd_one/SRSS.zip
(முற்றும்)

ஆக்கம்: உமர்

திரு. உமர் அவர்களுக்கு நன்றி.
Thursday, October 07, 2004

எனது முதல் செய்தி

இந்த தளம் இப்போது வடிவமைக்கப்படுகிறது.
வெகு விரைவில் முழுமையாகப் பார்வையிடலாம்.
மேலதிக தொடர்புகளுக்கு . rajtamilcom@yahoo.com

என்னும்முகவரிக்கு மின்னஞ்சல் செய்க.
எமது மடலாடற்குழு E-Friends Tamil Computer.
முகவரி.
http://groups.yahoo.com/group/efriendstamilcomputer/

நன்றி.
தோழமையுடன்,
இ.ராஜ்காந்த்.

Click to join efriendstamilcomputer